பாதுகாப்பு அங்கியை அணியாமல் படகில் பயணித்த குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரதமருக்கு 250 டொலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டேர்ன்புல், கிறிஸ்மஸ் விடுமுறையைக் கழிப்பதற்காக தனது மனைவி லூஸியுடன் நியூசௌத்வேல்ஸிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றிருந்தார். 

அப்போது, அருகிலுள்ள ஏரியில் சிறு படகில் தனியே பயணித்திருந்தார். எனினும் அப்போது அவர் பாதுகாப்பு அங்கியை அணிந்திருக்கவில்லை.

இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியானதையடுத்து, அது குறித்து வேறுபட்ட கருத்துக்கள் பதிவாகின.

எனினும் தனது வீட்டுக்கும் ஏரிக்கும் இடையிலுள்ள 20 மீற்றர் தூரத்தையே தாம் படகில் கடந்ததாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும் இது பற்றி ஆராய்ந்த நியூசௌத்வேல்ஸ் கடற்பயண அதிகார சபை பிரதமராயிருந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறி 250 டொலர்களை அபராதமாக விதித்தது.

“குறுந்தூரமாயினும் பாதுகாப்பு அங்கி நமது பாதுகாப்புக்காகவே அணியப்பட வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது. இச்சம்பவத்தில் இருந்து நான் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் டேர்ன்புல், அபராதத் தொகையைச் செலுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.