அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் நேற்று பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. 

குடியிருப்பு பகுதியை நோக்கி சுமார் 150 அடி உயரத்தில் இருந்து இக்கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களிலும் பல தடவைகள் இவ்வாறான கற்பாறைகள் விழுந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இப்பகுதியில் மண்சரிவு ஏற்படுமோ என்ற அச்ச நிலை மக்கள் மனதில் தோன்றியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் நித்திரை இன்றி மக்கள் அவதிப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கினறனர். 

இப்பகுதியில் 21 குடும்பங்களை சேர்ந்த 150 இற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களிடம் சந்தா பணம் வாங்கும் தொழிற்சங்கங்களும் வேலை வாங்கும் தோட்ட நிர்வாகமும் வாக்கு கேட்கும் அரசியல் வாதிகளும்  இவர்களின் வாழ்க்கை முறை தொடர்பில் பாராமுகமாக இருந்து விடுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள், தோட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தங்களை உடனடியாக பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.