மன்னார் பேசாலை எட்டாம் வட்டாரத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பேசாலையிலுள்ள புடைவைக் கடையொன்றில் வேலை செய்துவந்த பேசாலை எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்ரனிஸ்லாஸ் நளீன் குரூஸ் (வயது 29) என்ற இளைஞன் கடந்த 8.12.2017 வெள்ளிக்கிழமை அன்று அவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்திருந்த நிலையில் பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞனின் கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

இளைஞரின் மர்ம மரணம் தொடர்பாக பேசாலை பொலிசார் ஒரு வார காலமாக மேற்கொண்ட தீவிர விசாரணையையடுத்து இறந்த இளைஞருடன் ஒரே இடத்தில் தொழில்புரிந்து வந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.

அத்துடன் கொலைச் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் தடயப்பொருட்களும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூலம் பொலிசார் கைப்பற்றியதுடன் நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக கையளித்தனர்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் கொலைச் சந்தேக நபரை மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று வெள்ளிக் கிழமை ஆஜர்படுத்தியபோது அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவன் உத்தரவிட்டார்.

இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகிய பொலிஸார் நீதிபதியிடம் குறித்த கொலை தொடர்பில், வேறொரு நபரிலும் சந்தேகம் இருப்பதால் இது விடயமாக அந்த சந்தேகநபரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இவ் வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதுடன் சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.