பாம்பன் பாலத்திற்கு கீழாக அடுத்தடுத்து 4 கப்பல்கள் பயணித்த காட்சியைப் பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர்.

இந்தியாவின் பாம்பன் ரயில் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்குநீரிணை கடற்பகுதிகளில் இந்தியாவோடு இராமேஸ்வரம் தீவை இணைக்கிறது. 

இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இதுதான். இந்த பாம்பன் பாலம் 2.3 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. மேலும் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன.

பாம்பன் ரயில் பாலத்தின் மத்திய பகுதியில் தூக்குப்பாலம் அமைந்துள்ளது. வடபகுதியில் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் இருந்தும், தெற்கே மன்னார் வளைகுடா செல்லும் கப்பல்களும், விசைப்படகுகள் இந்த தூக்குப் பாலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும்.

மும்பை துறைமுகத்தில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக சரக்கு கப்பல் ஒன்றும், கோவாவிலிருந்து அந்தமான் போர்ட் பிளேயருக்குச் செல்வதற்காக மூன்று பயணிகள் கப்பலும் பாம்பன் பாலத்தை கடந்து செல்வதற்காக மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டு காத்திருந்தன.

இந்நிலையில், வியாழக்கிழமை  மதியம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் தூக்கப்பட்டதும் மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் ஜலசந்தி கடற்பகுதிக்கு செல்வதற்காக காத்திருந்த 4 கப்பல்களும் அந்தப் பாலத்தின் கீழாக சென்றன.

ஒரே நேரத்தில் 4 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றதால் இராமேஸ்வரம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்களை கண்டு வியப்படைந்தனர்.