அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ‘பொக்ஸிங் டே’ டெஸ்டில் அசத்திய அலெஸ்டர் குக் இரட்டைச்சதம் அடிக்க, இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்ற அவுஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.
நான்காவது போட்டி ‘பொக்ஸிங் டே’ டெஸ்டாக மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 327 ஓட்டங்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை எடுத்திருந்தது. குக் (104), ரூட் (49) களத்தில் இருந்தனர்.
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. ரூட் (61) அரைச்சதம் கடந்தார். மாலன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். லியான் ‘சுழலில்’ பேர்ஸ்டோவ் (22), மொயீன் அலி (20) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் வீழ்ந்தனர்.
இருப்பினும், மூத்த வீரரான குக் பொறுப்புடன் விளையாடினார். வோக்ஸ் 26, கரான் 4 ஓட்டங்களுடன் விரைவில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அசத்திய குக் டெஸ்ட் அரங்கில் 5ஆவது இரட்டைச் சதம் அடித்தார். தன் பங்கிற்கு பிராட் (56) அரைச்சதம் கடந்தார். ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களுக்கு 491 ஓட்டங்கள் எடுத்து, 164 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. குக் (244), அண்டர்சன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிறப்பாக செயற்பட்ட குக், டெஸ்ட் அரங்கில் அதிக முறை (5) இரட்டைச் சதம் அடித்த 2ஆவது இங்கிலாந்து வீரரானார். முதலிடத்தில் ஹாமண்ட் (7) உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக அதிக இரட்டைச் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற
பெருமையை தென்னாபிரிக்காவின்
ஸ்மித்துடன், குக் பகிர்ந்து கொண்டார். இருவரும் இதுவரை தலா 5 முறை இரட்டைச் சதம் அடித்துள்ளனர். முதலிடத்தில் சேவாக் மற்றும் மாவன் அத்தபத்து ஆகியோர் தலா 6 இரட்டைச் சதத்துடன் உள்ளனர்.