தூய்­மை­யான அர­சாங்­கத்தை உரு­வாக்கும் எனது போராட்டத்­தின்­போது  எனது வாள்­வீச்சில் எந்தக் கட்சி, எந்த வர்ணம்,  வெட்­டுப்­ப­டப்­போ­கின்­றன என்றும் யார் வெட்­டுப்­ப­டப்­போ­கின்­றார்கள் என்றும் எனக்குத் தெரி­யாது. இன் றும் நாளையும் நான் மேற்கொள்ளும் போராட்­டத்தின் மூல­மாக தூய்­மை­யான அர­சி­யலை அமைப்­பதே தனது நோக்கம் என்று   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

நாளை நாம் அமைக்கும் அர­சாங்கம் ஜன­நா­யகம் வாய்ந்த தூய்­மை­யான அர­சாங்கம் என்­ப­தற்­கான நல்­ல­தொரு எடுத்­துக்­காட்­டாக இந்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை கையாள வேண்டும் எனவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். 

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து கள­மி­றங்கும் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் இணைந்து தேர்­தலின் நகர்­வுகள் குறித்த வேலைத்­திட்ட நிகழ்வு  நேற்று கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு பண்­டா­ர­நா­யக ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் உரை­யாற்­றிய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும்  உரை­யாற்­று­கையில்,

நாட்டில் இணக்­கப்­பாட்டை உரு­வாக்க ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மாற்றுக் கருத்­துக்கள் உள்­ளன. வெவ்­வேறு வகையில் கருத்­துக்­களை முன்­வைத்து நாட்­டினை முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் குறித்து தெரி­விப்­பார்கள். அவற்றில் மிகவும் சரி­யா­னதும், அனை­வ­ராலும் ஏற்­று­கொள்­ளக்­கொள்ளக் கூடிய, மக்­களை பாது­காக்கும், நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் கொள்­கை­யி­னூ­டாக செயற்­ப­டு­வதே நாட்டின் நல்­லி­ணக்­கத்­தையும் கூட்­டுப்­பொ­றுப்­பையும் உரு­வாக்கும் வழி­மு­றை­யாக அமையும். 

சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான இலங்­கையில் ஆட்­சி­ய­மைத்த அர­சியல் கட்­சிகள் தத்­த­மது கொள்­கை­களை செயற்­ப­டுத்­து­வ­திலும் , கூட்­டுப்­பொ­றுப்­பினை கையாள்­வ­திலும் எதிர்­கொண்ட அழுத்­தங்கள், சவால்கள் எவ்­வா­றா­னவை   என்­பது எம் அனை­வ­ருக்கும் தெரிந்­த­தே­யாகும். 1956 ஆம் ஆண்டு இலங்­கையில் எஸ்.டபிள்யு. ஆர்.டி.  பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட கூட்டு அர­சாங்­கமே இலங்­கையின் முதல் தேசிய அர­சாங்­க­மாகும். அப்­போ­தைய அர­சியல் கட்­சிகள் இட­து­சாரி கட்­சிகள் அனைத்­தையும் இணைத்து புரிந்­து­ண­வர்வு மூல­மாக கூட்டு அர­சாங்­கத்தை அமைக்க முடிந்­தது. இந்த இணக்­கப்­பாட்டு அர­சாங்­கத்தின் மூல­மாக இலங்­கைக்கு என்ற கொள்­கை­யினை, கலாச்­சா­ரத்­தினை, உடன்­ப­டிக்­கை­களை உரு­வாக்கி கால­ணித்­துவ தன்­மையில் இருந்து முழு­மை­யாக விடு­பட முடிந்­தது. கடந்த சில தசாப்­தங்­களில் இலங்­கையில் உரு­வா­கிய அர­சாங்­கங்­க­ளினால் இலங்­கைக்­கென்ற பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க முடிந்­தது.

இவ்­வாறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்த போதிலும் நாடு என்ற ரீதியில் எம்மால் முன்­னோக்கி பய­ணிக்க முடி­ய­வில்லை. இலங்­கையை விடவும் பின்­னோக்கி நின்ற நாடுகள் பல இன்று இலங்­கையை விடவும் முன்­னேறி வெற்­றி­கண்டு வரு­கின்­றன. இலங்­கையின் கல்­வி­மான்­களில் பிரச்­சி­னைகள் இல்லை, ஆக்­கத்­திறன் கொண்­ட­வர்­களில் எந்த குறையும் இல்லை, முயற்­சி­யா­ளர்கள், தெளி­வான சிந்­தனை கொண்ட நாட்­டினை நேசிக்கும் மக்­க­ளிலும் எந்த குறையும் இல்லை.  எனினும் கடந்த சில தசாப்த கால­மாக இந்த நாட்டின் தலைமை பொறுப்­பினை ஏற்ற தலை­மை­களின் சுய­ந­ல­மான கொள்­கையும் தவ­றான செயற்­பா­டு­க­ளுமே நாம் இவ்­வாறு பின்­னோக்கி பய­ணிக்க பிர­தான கார­ண­மாகும். அர­சியல் செய்யும் எந்த நபர்­க­ளுக்கும் தனிப்­பட்ட கொள்­கைகள் இருக்கக் கூடாது, சுய­ந­ல­மான செயற்­பா­டுகள் இருக்கக் கூடாது. மாறாக நாடு, நாட்டு மக்­களின் எதிர்­காலம்,  நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் பொது இணக்­கப்­பாடே அவ­சி­ய­மாகும். 

இந்த நாட்டின் தவ­று­களை திருத்திக் கொள்ள, அர­சியல் வாதி­களின் தவ­று­களை திருத்­திக்­கொள்ள கீழ் மட்­டத்தில் இருந்து செயற்­பட வேண்டும். மேல்­மட்­டத்தில் உள்ள தவ­று­களை உட­ன­டி­யாக திருத்த முடி­யாது.   நாட்டின் அர­சி­ய­லா­னது ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்றம், மாகா­ண­சபை மற்றும் உள்­ளூ­ராட்சி சபைகள் என்ற நான்கு கட்­டங்­களில் உள்­ளன. இவற்றில் அடி­மட்­டத்தில் இருந்து நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பதே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நோக்­க­மாக உள்­ளது. மேலி­டத்தை உட­ன­டி­யாக மாற்­றி­ய­மைக்க முடி­யாது உள்­ளது. மேலி­டத்தின் தவ­று­களை உட­ன­டி­யாக திருத்திக் கொள்ளும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை.  ஆகவே நாம் பிர­தேச சபை­களில் இருந்து ஊழல் இல்­லாத, மக்­களை ஏமாற்­றாத நாட்­டையும் மக்­க­ளையும் கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். ஆகவே இந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஊழல், களவு கொள்ளை இல்­லாத அர­சியல் துஸ்­பி­ர­யோகம் இல்­லாத நபர்­களை உரு­வாக்க வேண்டும். 

 நாட்­டுக்­கான சரி­யான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுப்­பதை போலவே இந்த நாட்டின் அர­சி­ய­லிலும் மக்­களை நேசிக்கும் மக்­க­ளுக்கு சேவை­யாற்றும் தூய்­மை­யான அர­சியல் தலை­மை­களை உரு­வாக்கிக் கொடுக்க வேண்­டிய அவ­சி­யமும் உள்­ளது. ஆகவே உள்­ளூ­ராட்சி மன்­றத்தில் இருந்து அதற்­கான வேலை­யினை ஆரம்­பிப்போம். சரி­யான அர­சி­யலை உரு­வாக்க காலம் உள்­ளது. எதிர்­கா­லத்தை பலப்­ப­டுத்த இப்­போதே நல்ல திட்­டங்­களை உரு­வாக்­குவோம். கூட்­டுப்­பொ­றுப்­பினை உரு­வாக்க சரி­யான வேலைத்­திட்­டங்­களை உரு­வாக்­குவோம். தவ­றுகள் உள்­ளன. தனித் தீர்­மா­னங்கள் உள்­ளன அவற்றை மாற்­றி­ய­மைக்க வேண்டும். எமது நாட்டின்  அர­சியல் அமைப்­பினை எடுத்துக் கொண்டால் அதில் அதி­கார பகிர்வு குறித்தும் அவை   எவ்­வா­றான வகையில் மக்­களை சென்­ற­டைய வேண்டும் எனவும் சட்ட ரீதி­யாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக ரீதியில் அவை குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. எனினும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் தலை­வர்கள் கடந்த காலங்­களில் எவ்­வாறு அவற்றை பயன்­ப­டுத்­தினர். சட்­டத்தை கையில் எடுத்து எவ்­வாறு செயற்­ப­டுத்­தினர் தனித் தீர்­மா­னங்­களை எவ்­வாறு எடுத்­தனர் என்று அவ­தா­னிக்க முடிந்­தது. சட்­டத்தில் என்ன கூறப்­பட்­டி­ருந்­தாலும்  அதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் நபர்­க­ளி­டமே இது தங்­கி­யுள்­ளது. 

ஆகவே சரி­யான தலை­மைத்­து­வத்­தினை உரு­வாக்­காது எம்மால் நாட்­டினை சரி­யான திசையில் செயற்­ப­டுத்த முடி­யாது. ஆகவே இந்த சவால்­களை நாம் எதிர்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. அதனை வெற்­றி­கொள்ள முடியும் என்ற நம்­பிக்­கையும் எமக்கு உள்­ளது. இதில் கூட்டு அர­சாங்கம் என்­பது மிகவும் முக்­கி­ய­மான பங்­கினை வகிக்­கின்­றது. கூட்­டணி அர­சாங்­கங்கள் அமைத்­ததன் மூல­மா­கவே நாட்டின் சகல சவால்­க­ளையும் வெற்­றி­கொள்ள முடிந்­தது. இதில் கூட்­டணி அமைக்கும் சக­ல­ரதும் மாறு­பட்ட கருத்­துக்­களை ஆலோ­ச­னை­களை ஒரு இடத்­திற்கு கொண்­டு­வந்து அதன் மூலம் ஆரோக்­கி­ய­மான கொள்கை ஒன்­றினை உரு­வாக்கி அதன் மூலம் நாட்டின் ஒத்­து­ழைப்­பினை பெற்­றுக்­கொண்டு செயற்­பட வேண்டும். 

ஆகவே பெப்­ர­வரி மாதம் இடம்­பெறும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மையில் எம்­முடன் கைகோர்த்து செயற்­படும் சகல கட்­சி­க­ளையும் இணைத்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணி­யாக தூய்­மை­யான கொள்­கையில் தேர்தல் சட்­டங்­களை மீறாத ஒரு கூட்­ட­ணி­யாக   செல்ல வேண்டும். அதன் மூலம் மக்­களின் ஆத­ரவை நாம் வெற்­றி­கொண்டு நாட்­டினை ஆரோக்­கி­ய­மான தன்­மைக்கு கொண்­டு­செல்ல வேண்டும். 

எதிர்­கா­லத்தில் இந்த நாட்டில் அமைக்­கப்­படும்  அர­சாங்கம் தூய்­மை­யா­னதும், ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய கொள்­கை­யினை உரு­வாக்கும் அர­சாங்­க­மா­கவும்  அமைய வேண்டும். அதற்­காக இந்த சிறிய அர­சாங்கம் என கருதும் உள்­ளூ­ராட்சி சபையின் மாற்றம் நல்­ல­தொரு எடுத்­துக்­காட்­டாக அமைய வேண்டும். இதில் பௌதீக வளங்­களை கொண்ட நபர்­களை அவ­தா­னிப்­பதை விடவும் அர­சி­ய­லுக்கு ஏற்ற தூய்­மை­யான அர­சி­யலை உரு­வாக்கக் கூடிய நபர்­களை எனது அணியில் நான் எதிர்­பார்க்­கின்றேன். அதுவே எனது இலக்­காகும். அதற்­கா­கவே நான் முயற்­சித்தும் வருகின்றேன். ஆகவே நான் முன்னெடுத்த போராட்டத்தை முன்னெடுக்க தூய்மையான அரசியல் கூட்டணியுடன் தூய்மையான அரசியல் வாதிகளை கொண்ட அணி எனக்கு தேவைப்படுகின்றது. 

எனது வாளில் வெட்டப்படுவது எனது நண்பர்களா, எனது உறவுகளாக என்று தெரியாது ,வீசும் வாள் அடையாளம் தெரியாது வெட்டும் என்று இலக்கியத்தில் நான் படித்துள்ளேன். அதேபோல் நானும் கூறுகின்றேன், எந்தக் கட்சி, எந்த வர்ணம், யார் என்று எனக்குத் தெரியாது எனினும் தூய்மையான அரசியலை உருவாக்கும் எனது போராட்டத்தில் எனது வாளால் யார் வெட்டுப்படப் போகின்றனர் என்று என்னால் கூற முடியாது. நாட்டின் எதிர்காலத்திற்காகவும் , மக்களின் எதிர்காலத்திற்காகவும் நான் துணிந்து செயற்படுவேன். இந்த போராட்டத்தில் மட்டும் அல்ல நாளைய மற்றைய போராட்டங்களிலும் நான் அவ்வாறே செயற்படுவேன் என அவர் குறிப்பிட்டார்.