தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பானது எதிர் காலத்தில் கொள்கைகளுடன் ஒத்துப்போகக்கூடிய ஈழ விடுதலைப்போராட்ட அமைப்புக்களை ஒன்றிணைத்து பல வேலைத்திட்டங்களை முன்னகர்த்த இருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், அவ் அமைப்பின் உயர் பீட உறுப்பினருமான எஸ்.ஆர் குமரேஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியானது(.ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த காலங்களில் ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலும், ஜனநாயாக அரசியல் வரலாற்றிலும் சரி கூட்டமைப்பின் ஊடாக ஒற்றுமையினை முன் நிறுத்தி பல்வேறுபட்ட முன்னகர்வுகளை மேற்கொண்ட ஓர் அரசியல் கட்சியாக திகழ்கின்றது.

அதன் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான போராட்டங்களை முன்னகர்த்தி வந்துள்ளது. 

அது மாத்திரமல்லாமல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு அந்த கூட்டமைப்பினுடைய ஒற்றுமைக்காகவும், ஜனநாயகத்தை பேனுவதற்காகவும் பல்வேறு வழிகளில் உட்கட்சி ஜனநாயகத்தை முன் நிறுத்தி பல போராட்டங்களை உள்ளுக்குள் நடத்தி வந்திருக்கின்றது.

அதன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த போராட்டங்களின் ஊடாக இன்று வரைக்கும் அந்த போராட்டங்களுக்கு எந்த விதத்திலும் பலன்கள் கிடைக்காத நிலையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியானது ஜனநாயக ரீதியான ஒரு மாற்றுத் தலைமையை தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை முன்னகர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இன்று தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு என்கின்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

தமிழ் மக்களுக்கான ஒரு ஜனநாயாக ரீதியிலான போராட்டங்களை முன்னகர்த்தக்கூடிய ஒரு அமைப்பாகவும் தமிழ் பேசும் மக்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது அமைப்பாகவும் பொதுச் சின்னத்தின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாத்திரமின்றி எதிர்காலத்தில் வர இருக்கின்ற அனைத்து தேர்தல்களையும் பொது அடிப்படையில் பொது சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கான ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக மேற்கொண்டுள்ளோம்.

எதிர் காலத்தில் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பானது கொள்கைகளுடன் ஒத்துப்போகக்கூடிய ஈழ விடுதலைப்போராட்ட அமைப்புக்களை ஒன்றினைத்து எதிர்காலத்தில் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான ஒரு மாபெரும் சக்தியாக இந்த அமைப்பை உருவாக்கி அவ் அமைப்பானது  மக்களுக்கான ஒரு சக்தியாக வளர வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னகர்த்தி வருகின்றோம்.

எதிர் காலத்தில் எம்மோடு பல அமைப்புக்கள் உள் வந்து இது ஒரு மாபெரும் சக்தியாக உதய சூரியன் சின்னத்தையும் ஒரு பொதுச்சின்னமாகவும் பொது அமைப்பாகவும் இன்றி தனி நபர் செயற்பாடு அல்லாமல் கூட்டுத்தலைமையின் அடிப்படையில் எதிர்காலத்தில் கூட்டு முயற்சியின் ஊடாக பல விடையங்களை முன்னகர்த்துவதற்கான ஒரு அமைப்பாக நாங்கள் இந்த அமைப்பை நகர்த்திக்கொண்டு வருகின்றோம்.

எதிர் காலத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் பங்காளிக்கட்சிகளாக இருந்த தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைகக்கழகம் போன்ற அமைப்புக்களும் எதிர்காலத்தில் எம்மோடு இணைவார்கள் என்பது எமது நம்பிக்கை.

அது மாத்திரமில்லாமல் வடக்கில் இருக்கின்ற எமது முதலமைச்சர் வர இருக்கின்ற மாகாண சபை தேர்தலில் உதய சூரியன் சின்னத்திலான தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவார் என்பது எங்களுடைய நம்பிக்கை மாத்திரமின்றி வட கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நம்பிக்கையாகவும் உள்ளது.

எதிர் காலத்தில் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பானது மக்கள் சக்தியாக உருவெடுப்பது மட்டுமின்றி உண்மையிலேயே மக்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கின்ற ஒரு சக்தியாக உருவாகும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமும் இல்லை.

எனவே மக்கள் இயக்கமாக கட்டி எழுப்பவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் இந்த சக்தியை  பலப்படுத்த வேண்டும்.என கேட்டுக்கொள்ளுகின்றோம்."என அவர் மேலும் தெரிவித்தார்.