யாழ்ப்­பா­ணத்தில் இது­வரை மர்மக் காய்ச்­சலால் இறப்பு சம்­ப­வங்கள் எவையும் பதி­வா­க­வில்லை என்று யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் டாக்டர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தில் மர்மக் காய்ச்­சலால் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டு­வ­தாக செய்­திகள் பர­வி­ய­தை­ய­டுத்து அவரைத் தொடர்­பு­கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், யாழ்ப்­பா­ணத்தில் இது­வரை மர்மக் காய்ச்­சலால் உயி­ரி­ழப்­புக்கள் இடம்­பெற்­ற­தாக பதி­வுகள் இல்லை. அது தொடர்­பாக வெளி­யான செய்­திகள் போலி­யா­னவை. குறிப்­பாக இப் பகு­தியில் மர்மக் காய்ச்­சலால் இறப்­புக்கள் ஏதேனும் இடம்­பெற்­றி­ருந்தால் அவர்­கள் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­பார்கள். ஆனால் எமது வைத்­தி­ய­சா­லையில் இறப்­புக்கள் தொடர்­பான பதி­வு­களில் அவ்­வா­றான பதிவு ஒன்றும் செய்­யப்­ப­ட­வில்லை.

கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் முல்­லைத்­தீவில் இன்­பு­ளு­வன்சா பீ தொற்றால் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட போதும் அவ்­வா­றான காய்ச்சல் இப் பகுதியில் ஏற்படவில்லை. எனவே இது தொடர்பாக பொது மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.