அர­சாங்­கத்­திற்கு எதி­ராக தேங்காய் உடைப்­ப­தாயின் நாடு­பூ­ரா­கவும் உள்ள அரச தோட்­டங்­களில் விலைக்கு வாங்கி பத்து இலட்சம் தேங்­காய்­க­ளா­வது உடை­யுங்கள். அதன் ஊடாக தென்னை பயிர்­ச்செய்­கை­யா­ளர்­களின் வரு­மானம் அதி­க­ரிக்கும். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாம் பூரண ஆத­ர­வினை நல்­குவோம். அதற்கு மாறாக அரச தோட்­டங்­களில் தேங்காய் திருட வேண்டாம். திருட்டு தேங்­கா­யினை கொண்டு இறை­வனை நாடு­வதில் பய­னில்லை. தேசிய அர­சாங்­கத்தினூடாக நாம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டத்­தினை முடக்­கு­வ­தற்கு நாம் எவ­ருக்கும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு, கட்­சியின் தலை­மை­யகம் உள்­ளிட்ட அனைத்து துறைகளை­யும் மறு­சீ­ர­மைக்க திட்­ட­மிட்­டுள்ளோம். தேசிய அர­சாங்­கத்தில் இருந்து கொண்டு எமது கட்­சியை நாம் பாது­காக்க வேண்டும். இதன்­படி கட்­சியில் புதிய வேலைத்­திட்­டங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­க­வுள்ளோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

குரு­நாகல், குளி­யாப்­பிட்­டிய பிர­தே­சத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ருடன் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்­கையின் 68 ஆவது சுதந்­திர தின விழா மிகவும் கோலா­க­ல­மாக கொண்­டா­டப்­பட்­டது. இது போன்றே எமது வேலைத்­திட்­டங்கள் முன்­னோக்கி பய­ணிக்கும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் பிறந்­தது, சுதந்­தி­ர­ம­டைந்த இலங்­கை­யி­லாகும். இதற்கு முன்னர் நாட்டை ஆட்­சி­பு­ரிந்த ஜனா­தி­ப­தி­களும் பிர­த­மர்­களும் பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சியின் போதே பிறந்­தனர். ஆகவே நாம் இரு­வரும் சுதந்­திர இலங்­கையில் பிறந்து இல­வசக் கல்­வியைப் பயின்­றுள்ளோம். பிரித்­தா­னிய ஆட்­சியின் அனு­ப­வத்தை நாம் இரு­வரும் கண்­ட­தில்லை.

நவீன தொழில்­நுட்ப குழந்­தை­க­ளுக்கு ஏற்ற வகை­யி­லான நாட்டை உரு­வாக்­கு­வதே எமது பிர­தான நோக்­க­மாகும். அர­சியல் ரீதி­யாக இலங்­கையில் மூன்று புரட்­சிகள் நடந்­தே­றி­யுள்­ளன. முத­லா­வது புரட்­சி­யா­னது தேச­பிதா டீ.எஸ். சேனா­நா­யக்­க­வினால் பிரித்­தா­னி­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கைக்கு சுதந்­திரம் பெற்­றுக்­கொ­டுத்­த­மை­யாகும். அடுத்த புரட்­சி­யா­னது, எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் சமூகப் புரட்சி செய்­யப்­பட்­டது. மூன்­றா­வது புரட்­சியை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்த்­தன நிகழ்த்­தி­யி­ருந்தார். அதா­வது, நவீன யுகத்தை இலங்­கைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இத­னூ­டாக முத­லா­வது புரட்­சியில் சுதந்­தி­ரமும், இரண்­டா­வது புரட்­சியில் கலா­சார விழு­மியம் சார்ந்த குழந்தை பிறப்பும், மூன்­றா­வது புரட்­சியில் தொழில்நுட்ப யுகம் சார்ந்த குழந்தை பிறப்பும் இடம்­பெற்­றுள்­ளன.

நெருக்­க­டி­மி­குந்த உலக பொரு­ளா­தார மற்றும் அர­சியல் சூழலில் பூகோள பொரு­ளா­தா­ரத்தை நோக்கி உலகம் பய­ணிக்­கின்­றது. இதன்­போது இலங்கை தொழில்­நுட்­பத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு முன்­நோக்கி நகரும் போது தேசிய அர­சாங்கம் இலங்­கையின் நான்­கா­வது புரட்­சியை முன்­னெ­டுத்த பெரு­மையைப் பெற்­றுக்­கொள்ளும். இத­னூ­டாக வறு­மையை முழு­மை­யாக ஒழித்து, மிகவும் தர­மான 10 இலட்சம் தொழில் வாய்ப்­புகள் வழங்கி, 2030 ஆம் ஆண்­ட­ளவில் அதி­க­ளவு வரு­மானம் பெறும் நாடாக இலங்­கையை மாற்றும் தேசிய அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டமே நான்­கா­வது புரட்­சி­யாகும்.

இலங்­கையின் நான்­கா­வது புரட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்கு தனி­யொரு கட்­சி­யினால் முடி­யாது. கட்சி பேதங்கள் பாராமல் அனை­வரும் ஒன்றிைணய வேண்டும். எதிர்­கால சந்­த­தி­யி­னர்­களின் பிரச்­சி­னை­களை நாம் அவ­தா­னிக்க வேண்டும். எப்­போதும் ஒரு இடத்­தி­லேயே எம்மால் நிலைத்து நிற்க முடி­யாது. எமது வளர்ச்­சிக்கு ஏத­ாவாது செய்­யுங்கள் என்றே எமது இளை­ஞர்கள் கோரு­கின்­றனர். எமது நாட்டு இளை­ஞர்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறைவேற்ற வேண்டும்.

கடந்த வரு­டத்தில் அர­சியல் ரீதி­யான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். இந்த ஆண்டில் பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­களை ஆரம்­பிக்க உள்ளோம். இதன்­பி­ர­காரம் மேல் மாகாண மாந­கர வேலைத்­திட்­டத்தை தற்­போது ஆரம்­பித்­துள்ளோம். இன்னும் சில நாட்­களில் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களை ஆரம்­பிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். இதன்­படி மத்­திய அதி­வேக பாதை நிர்­மா­ணிக்­கப்­பட உள்­ளது. இத­னூ­டாக குரு­நாகல் மாவட்டம் பாரிய வளர்ச்­சியை நோக்கி பய­ணிக்கும். அத்­துடன் பொரு­ளா­தார ரீதி­யாக பல்­வேறு வல­யங்­களை குரு­நாகல் , மிரி­கமை பிர­தே­சங்­களை மைய­மாக கொண்டு ஆரம்­பிக்க உள்ளோம். இது போன்று பொரு­ளா­தார ரீதி­யாக சிறந்த நிலை­மைக்கு நாட்டை நாம் கொண்டு செல்­ல­வுள்ளோம்.

இருந்­த­போ­திலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒரு சிலரின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் படு­பா­தா­ளத்தை நோக்கி பய­ணிக்­கின்­றது. தேசிய அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­களும் பெரும் இடை­யூறு விளை­வித்த வண்­ண­முள்­ளனர். அர­சாங்­கத்தினூ டாக நாம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டத்­தினை முடக்­கு­வ­தற்கு நாம் எவ­ருக்கும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்றார்.