சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று அங்கு இரண்டு மாடிக்கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து மூன்று ஆண்டுகளாக அந் நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தனது தாயின் உடலை மீட்டுத் தருமாறு கெகிராவ, கிதுல்ஹிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த தாயின் மகன் ஊடகங்கள் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கை விடுக்கப்பட்டதற்கமைவாக உயிரிழந்து ஒரு மாதம் கடந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் தலதா அதுகோரள தலையிட்டு அரச செலவில் உயிரிழந்த தாயின் உடல் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு முடியாத அளவிற்கு உடல் உருக்குழைந்து காணப்பட்டதால் குறித்த தாயின் உடல் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய தாயை அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவரின் உடல் உருக்குழைந்து காணப்பட்டதாகவும் அவரின் கால் நகம் ஒன்று இல்லாமல் இருந்த நினைவு தனக்கு தோன்றவே அதை வைத்தே தங்களிடம் ஒப்படைக்கப்பட்டது தனது தாயின் உடல் என அடையாளம் கண்டு கொண்டதாக என்.கே.ஏ.கனுஷ்க தேராஜ் என்ற உயிரிழந்த தாயின் மகன் தெரிவித்துள்ளார்.

கிதுல்ஹிடியாவ பிரதேசத்தில் வசிப்பிடமாக கொண்ட தீபானி குமாரசிரி என்ற உயிரிழந்த குறித்த தாய் 2011ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 2013ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருந்த வேளை அவர் வேலை செய்த வீட்டில் சம்பளம் வழங்காது வீட்டில் சிறை வைத்து வேலை வாங்கியதாக கனுஷ்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் பல மாதங்களாக தாயிடமிருந்து எது வித தகவலும் இல்லாத நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்த பின்னரே தனது தாய் இரண்டு மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து அந் நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்தள்ளது.

அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி தனது தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திலிருந்து உயர் அதிகாரி ஒருவர் தொலைப்பேசி ஊடாக தொடர்பு கொண்டு அறிவித்ததாகவும் கனுஷ்க தெரிவித்தார்.