ஊழலில் ஈடுபட்டமை மற்றும் ஆட்சியைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேர்ட்டோ புஜிமோரிக்கு அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி  பெட்ரோ பவ்லோ கீயுச்சென்ஸ்கி  பொதுமன்னிப்பளித்துள்ளார்.

79 வயதான புஜிமோரியின் தேக ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு பொதுமன்னிப்பளிப்பதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.

ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்குள்ளான புஜிமோரி சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் மாற்றப்பட்டார். இதனையடுத்தே அந்நாட்டு ஜனாதிபதி நேற்று பொதுமன்னிப்பளித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டுவரை புஜிமோரி ஜனாதிபதியாகப் பதவி வகித்துவந்தார்.

இந்நிலையில் ஊழலில் ஈடுபட்டமை மற்றும் ஆட்சியைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி புஜிமோரிக்கு 6 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை கடந்த 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு அவர்  மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 25 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.