பிலிப்பைன்ஸின் மின்டானோ  தீவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக  தொடர்ச்சியாக அடை மழை பெய்துவரும் நிலையில் மின்டானோ  தீவில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் ரெம்பின்  சூறாவளி நேற்று வீசியுள்ளது. இதனையடுத்து அங்கு வெள்ளப்பெருக்குடன்  பாரிய  மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீவிலுள்ள ரெபோட்,  பியாகாபோ  ஆகிய கிராமங்களே மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இக்கிராமங்களிலுள்ள பல வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், அவ்வீடுகளில் வசிக்கும் பலர் வெளியேறியுள்ளனர்.

இதேவேளை பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயத்தில் உள்ளன.  மேற்படி தீவில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரெம்பின் சூறாவளி ஸ்ப்ராட்லி தீவை நோக்கி  இன்று  நகரவுள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.