மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு கிராமம், அருளப்பர் வீதி பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்று இன்று  மதியம் திடீர் என ஏற்பட்ட காற்றின் காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளது.

தாழ்வுபாடு கிராமம் அருளப்பர் வீதி பகுதியில் உள்ள பீற்றர் அந்தோனி மெராண்டா என்பவருடைய வீடே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

இன்று  காலை கணவர் தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் வீட்டில் இருந்த நேரம் குறித்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் தாய் மதிய சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததோடு, பிள்ளைகள் வீட்டினுள் இருந்துள்ளனர்.

இதன் போது திடீர் காற்று காரணமாக வீடு மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்த நிலையில், தாய் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்துள்ளார்.

இதன் போது குறித்த வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. குடிசை வீடாக காணப்பட்ட போதிலும் வீட்டின் மேல் பகுதியில் ஓடுகள் போடப்பட்டுள்ளது.

இதனால் வீட்டினுள் காணப்பட்ட பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.

இந் நிலையில் கிராம அலுவலகருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் கிராம அலுவலகர்  சேதமடைந்த வீட்டை  பார்வையிட்டதோடு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.

குறித்த குடும்பத்தினர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற நிலையில் தாழ்வுபாட்டு கிராமத்தில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த குடும்பத்தினருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.