( ரி.விரூஷன் )

யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்.இராணுவ படைத் தலமையகம் முன்னெடுத்துள்ளது.

குறித்த நாக விகாரையின் விகாரதிபதி மேகாஜதுரே ஜானரத்ன கடந்த 19ஆம் திகதி உயிரிழந்திருந்தார். அவரது உடலினை இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தகனம் செய்வதற்கு யாழ்.இராணுவ படைத் தலைமையகம் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு பின்னால் பொதுவெளியில் இவரது உடலினை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ். இராணுவ படைத் தலைமையகம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்காக குறித்த பகுதியில் தகனம் செய்வதற்கான கோபுரங்கள் அமைக்கப்பட்டும், அஞ்சலிகள் நடாத்துவதற்கான கொட்டகைகள் அமைக்கப்படும் அப் பகுதி முழுவதும் இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டில் மேற்படி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் குறித்த விகாராதிபதியின் தகன அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை இராணுவத் தளபதி மகேஸ்சேனநாயக்கவும் அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் தகனம் செய்யக் கூடாது என பொதுமகன் ஒருவரால் யாழ்.நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

மேலும் தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையானது குறித்த பகுதியில் தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத்தூபி, முனீஸ்வரர் ஆலயம், ஆகிய உள்ள நிலையில் அங்கு தகனம் செய்யக் கூடாதென உத்தரவிட வேண்டும் எனக் கூறி வடமாகாண முதலமைச்சர், யாழ்.மாநகர சபை ஆணையாளர் மற்றும் தொல்பொருளியல் திணைக்கள யாழ்.ஆணையாளர் ஆகியோருக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது.