முதல் உலகப்போரின் போது மாயமான அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் சுமார் 103 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போரில் பங்கேற்பதற்காகச் சென்ற அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ் ஏ.இ-1 (HMAS AE-1 ) என்ற நீர்மூழ்கிக் கப்பல்  திடீரென மாயமானது.

குறித்த கப்பலில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் கடற்படை வீரர்கள் 35 பேர் பயணித்திருந்தனர்.

பப்புவா நியூகினியாவின் ரபாலுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 திகதியன்று மாயமாகியது.

காணாமற்போன நீர்மூழ்கிக்கப்பலைத் தேடும் பணிகள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், 103 ஆண்டுகளுக்குப் பின்னர் கப்பலின் சிதைந்த பாகங்கள் பப்புவா நியூ கினியாவின் பார்க் தீவுகள் பகுதியில், கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை ஆஸ்திரேலியாவின் 13 ஆவது தேடல் குழுவால் இக்கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கென நீருக்குள் மூழ்கித் தேடும் ‘டிரோன்’ பயன்படுத்தப்பட்டுள்ளது.

காணாமல் போன குறித்த கப்பலில் இருந்தவர்களின் வாரிசுகளை தொடர்பு கொள்ளவும், அங்கு நினைவு தூபியொன்றை அமைக்கவும் பப்புவா நியூ கினியா அரசை ஆவுஸ்திரேலிய அரசு தொடர்புகொள்ளவுள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் 12 குழுவின் தேடல் முயற்சிகள் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், 13 ஆவது குழுவின் தோடலில் குறித்த கப்பலின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய கடற்படை வரலாற்றில் இது முக்கியமான சம்பவமென்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.