வவுனியாவில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு : சிலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை

Published By: Digital Desk 7

21 Dec, 2017 | 06:24 PM
image

வவுனியா வடக்கிற்கான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் சில அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் சீரான ஆவணங்களை சமர்ப்பிக்காமையால் அந்தந்த வட்டாரங்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ்  தெரிவித்தார்.

வேட்பு மனு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இந்த மாதம் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரை வேட்பு மனு காலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 12 கட்சிகளும், 5 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இதனடிப்படையில் வவுனியா நகரசபைக்கு 10 அரசியல் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 9 அரசியல் கட்சியும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 4 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.

வெண்கல செட்டிக்குளம் பிரதேசசபைக்கு 8 அரசியற் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன. இதனடிப்படையில் 45 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரேயொரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சில வேட்புமனுக்களில் வேட்பாளர்களது ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் கட்சிகள் நிராகரிக்கப்படா விட்டாலும் அந்த வட்டாரங்களிற்குரிய வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்." எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்