உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்தது என நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது,

" இதன்போது 69 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நுவரெலிய பிரதேச சபைக்காக 7 வேட்பு மனுக்களும், ஹட்டன் டிக்கோயா நகர சபைக்காக 6 வேட்பு மனுக்களும், அம்பகமுவ பிரதேச சபைக்காக 9 வேட்பு மனுக்களும், நோர்வூட் பிரேச சபைக்காக 7 வேட்பு மனுக்களும், கொட்டகலை பிரதேச சபைக்கு 10 வேட்பு மனுக்களும், அங்குராங்கெத்த பிரதேச சபைக்கு 5 வேட்பு மனுக்களும், வலப்பனை பிரதேச சபைக்கு 7 வேட்பு மனுக்களும், கொத்மலை பிரதேச சபைக்கு 5 வேட்பு மனுக்களும், மஸ்கெலிய பிரதேச சபைக்கு 6 வேட்பு மனுக்களும், அக்ரபத்தனை பிரதேச சபைக்கு 7 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு 69 வேட்பு மனுக்களில் ஒரு வேட்பு மனு மாத்தரம் நிராகரிக்கப்பட்டது. அது நுவரெலிய பிரதேச சபைக்காக லங்கா சமசமாஜ கட்சி தாக்கல் செய்த வேட்பு மனு. மேலும் 5 பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மாத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதாவது வேட்பாளரின் பிழையால் முழு வேட்பு மனு பத்திரமும் இம் முறை தேர்தலில் நிராகரிக்கப்படுவதில்லை என்பது முக்கிய விடயம். அதற்கமைய ஹட்டன், டிக்கோயா நகர சபைக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  ஒரு வேட்பாளரினதும், அம்பகமுவ பிரதேச சபைக்காக  கட்சியின் சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஒருவரின் பெயரும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேபால் நோர்வூட் பிரதேச சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் பெயரும். அதுபோல் கொட்டகலை பிரதேச சபைக்காக எக்சத் மகா ஜன கட்சி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஒருவரின் பெயரும், அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் பெயரும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் வலப்பனை பிரதேச சபைக்காக ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேட்பாளர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி சார்பில் வலப்பனை பிரதேச சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் ஒருவரின் பெயரும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல் 15 வேட்பு மனுக்கள் தொடர்பில் பல கட்சிகள் 15 முறைபாடுகளை பதிவு செய்துள்ளன. இதற்கமைய சுதந்திரமானதும், நீதியனதுமான தேர்தலை நடத்த நாம் உத்தேசித்துள்ளோம்." என்றார்.