எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஒரு சுயேட்சைக்குழுவும் 11 அரசியல் கட்சிகளும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் எந்த ஒரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை 2 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இன்று மதியம் வரை அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த வகையில் மன்னார் நகர சபை மற்றும் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய ஐந்து உள்ளூராட்சி  மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக்கூட்டமைப்பு), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(ஈ.பி.டி.பி),ஐக்கிய தேசியக்கட்சி,சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸ்,  சிறிலங்கா பொதுஜன பெரமுன  ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது மன்னார் நகர சபை உட்பட மன்னார், மாந்தை மேற்கு,  முசலி ஆகிய உள்ளூராட்சி மன்றங்களிலும், தேசிய காங்கிரஸ் கட்சியானது மன்னார் நகர சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி  மன்றங்களிலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி முசலி பிரதேச சபை உள்ளூராட்சி  மன்றத்திலும், ஜே.நிர்மலராஜ் தலைமையில்  சுயேட்சைக்குழு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலும், மக்கள் விடுதலை முன்னனி கட்சியானது நானாட்டான் பிரதேச சபை உள்ளூராட்சி  மன்றத்திலும் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

இன்று மதியம் 12 மணியில் இருந்து 1.30 மணிவரை முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக ஒரு முறைப்பாடு மாத்திரம் கிடைக்கப்பெற்ள்ளது.

எனினும் குறித்த முறைப்பாடு சரியான முறையில் அமையாததன் காரணத்தினால் குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்வில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.