கிறிஸ்தவ சமயம் மட்டுமன்றி ஏனைய சகல சமயங்களும் சமய சகவாழ்வுடன் கூடிய சமாதானம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதற்கே வழிகாட்டுகின்றன என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய நல்லிணக்கத்திற்கான பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுதலே இந்த நத்தார் பண்டிகையின் உறுதிமொழியாக அமைதல் வேண்டுமென தெரிவித்தார்.

கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட நத்தார் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நத்தார் வைபவத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும் கன்னியாஸ்திரிகளும் கலந்துகொண்டனர்.

வைபவத்தில் விசேட ஆசியுரை ஆற்றிய கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, இயேசு பிரானின் பிறப்பினூடாக இயற்கை சூழலை பாதுகாத்தல் தொடர்பாக கிறிஸ்தவ பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பொறுப்பினை சுட்டிக்காட்டினார்.

இயற்கையை பாதுகாப்பதற்கான கடமையை நிறைவேற்றுவதையே பரிசுத்த பாப்பரசர் தற்போது உலகிற்கு வழங்கிவரும் செய்தியாகும் எனச் சுட்டிக்காட்டிய பேராயர், இயற்கையை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பினையும் பாராட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, சூழல் பாதுகாப்பிற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றினை உருவாக்கி சூழல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மனிதர்களினதும் ஏனைய சகல உயிரினங்களினதும் நன்மைக்காக நவீன சுற்றாடல் சவால்களை எதிர்கொள்வதற்கு சகலரும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கரோல் கீதங்கள் உள்ளிட்ட விசேட அம்சங்களால் நத்தார் வைபவம் வர்ணமயமானது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.