( ரி.விரூஷன் )

யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீடானது முன்னர் புளொட் அமைப்பின் அலுவலகமாக செயற்பட்டு வந்த நிலையில் பின்னர் நீதிமன்றில் வீட்டின் உரிமையாளரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவுக்கமைய வீட்டினை மீட்பதற்காக பொலிஸார் சென்ற போதே வீட்டின் அலுமாரிகளில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்படி வீட்டில் இருந்து ரீ.56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படும் மகசீன் 6 உம், பிஸ்டல் 1, இராணுவம் பயன்படுத்தும் தண்ணீர் போத்தல் ஒன்று, வோக்கி டோக்கி ஒன்று, மற்றும் வாள் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வீட்டில் இதுவரை காலமும் வசிந்து வந்த முன்னாள் புளொட் அமைப்பைச் சேர்ந்த 69 வயதான முதியவர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.