மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பேசாலை பொலிஸார் கைது செய்துள்ளதோடு,கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சான்றுப்பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

உயிரிழந்த இளைஞனுடன்  வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் பேசாலையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்  வேலை செய்து வந்த பேசாலை 8 ஆம்  வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது-29) என்னும் இளைஞர் கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் அவரின் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞனின் மர்ம மரணம் தொடர்பில் உறவினர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்லப்பட்டது.

 குறித்த் சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மரணத்தில் சந்தேகம் கொண்டு சட்ட வைத்திய நிபுணரின் பார்வைக்கு சிபார்சு செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் குறித்த சடலத்தின்  உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்டார்.

இதன் போது கயிற்றை ஒத்த ஓர் பொருளினால் கழுத்து நெரித்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் தென்படுவதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த மரணம் கொலை என தெரிய வந்த நிலையில் பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

பேசாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.டீ.எம்.சிறில் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த இரகசிய விசாரணையின் போது மர்மமான முறையில் உயிரிழந்த குறித்த இளைஞனுடன் ஒரே வர்த்தக நிலையத்தில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை தலைமன்னார் பியர் றிஸாட் சிட்டி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து 24 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்ததோடு,குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்திய தடயப்பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொலை இடம்பெற்ற  நேரத்தின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தின் போது இறந்த இளைஞனின் உடலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து வெளி வந்த இரத்தம் கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரான கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் அன்றைய தினம் அணிந்திருந்த ஆடையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த உடையும் சான்றுப்பொருளாக பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும்  உயிரிழந்த  இளைஞனை கழுத்து நெறித்து கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் பொதிகள் கட்டும் துணியிலான கயிற்றையும் பொலிஸார் தலைமன்னார் பேசாலை வீதியின் அருகே உள்ள பற்றைக்குள் இருந்து சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் மீட்டுள்ளனர்.

8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேசாலை ஆலய திருவிழாவாக இருந்தமையால் சம்பவத்துக்கு முதல் நாள் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு வரை குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரே உயிரிழந்த இளைஞனை  அவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்  அழைத்துச் சென்றுள்ளார்.

இறந்த இளைஞனின் வீட்டில் தாயும் இறந்த இளைஞனுமே வாழ்ந்து வந்துள்ளனர்.

குறித்த இளைஞனின் தாய் அன்றைய தினம் கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் இளைஞன் மட்டுமே தனிமையில் இருந்த நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த நபர் கொலையினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனுக்கும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்குமிடையே சில தினங்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பேசாலை பொலிஸார் குறித்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை (15) மன்னார் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

விசாரனைகளை மேற்கொண்ட நீதிவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பேசாலையில் இடம் பெற்ற குறித்த இளைஞனின் மர்ம மரணம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.