தனது நாடு இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு ( ஐ.எஸ்.) எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் - அபாடி செய்திருக்கும் பிரகடனம் மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக நீடித்த போர் முடிவுக்கு வந்திருப்பதை சமிக்ஞை காட்டுவதாக அமைந்திருக்கிறது. 

அந்தப் போரின் தொடக்கத்தில் ஈராக்கிய துருப்புக்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு தப்பியோடின. பிறகு அத் துருப்புக்கள் இழந்த பிராந்தியங்களை மீட்டெடுப்பதற்காக வெளி நாட்டு உதவியுடன் தங்களை மீள அணி திரட்டிக் கொண்டதையும் காணக் கூடியதாக இருந்தது.

இஸ்லாமிய அரசு அதன் உச்சபட்ச செல்வாக்கு கால கட்டத்தில் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசூல் உட்பட அந் நாட்டின் சுமார் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நாடு உள்நாடடுப் போரின் மத்தியில் இருந்தபோது 2014 ஆம் ஆண்டு செப்டெம்பரில் பிரதமராக பதவியேற்ற அபாடி அமெரிக்காவினதும் ஈரானினதும் நேரடி உதவியுடன் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் படிப்படியான அணுகுமுறையைக் கடைபிடித்து இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரை முன்னெடுத்தார். 

ஈராக்கிய துருப்புக்கள் முதலில் இஸ்லாமிய அரசுப் படைகள் தெற்கு நோக்கி முன்னேறி பாக்தாதின் புற நகர் பகுதிகளுக்கு வருவதைத் தடுத்து நிறுத்தின. பிறகு இஸ்லாமிய அரசுப் படைகளின் செல்வாக்கின் கீழ் இருந்த சிறிய பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ரமாடி, பலூஜா போன்ற நகரங்களைக் கைப்பற்றிய பிறகு இஸ்லாமிய அரசின் ' கிரீடத்தில் இருந்த ஆபரணம்" என்று வர்ணிக்கப்பட்ட மொசூல் நகருக்கு ஈராக்கிய துருப்புக்கள் நகர்ந்தன. 

அமெரிக்கா விமான தாக்குதல்களை நடத்த, குர்திஷ் பெஷ்மெர்கா துருப்புக்களும் ஈரானிடம் பயிற்சி பெற்ற ஷியா திரட்டல் படைகளும் தரைச் சண்டையில் இணைந்து கொண்டன. ஒன்பது மாத சண்டைகளுக்கு பிறகு ஜூலையில் மொசூல் நகர் விடுவிக்கப்பட்ட போது இஸ்லாமிய அரசுப்படைகளுக்கு எதிரான ஈராக்கின் இறுதி வெற்றி எந்த நேரத்திலும் கிட்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நகரப் பகுதிகளை இழந்த பிறகு பின் வாங்கிச் சென்று இஸ்லாமிய அரசுப் படைகள் எல்லையோரம் இருக்கும் சிறிய நகர்களில் நிலைகொண்டிருந்தன. அந்த நகர்களில் இருந்தும் இஸ்லாமிய அரசுப் படைகளை வெளியேற்றியதை அடுத்து ஈராக்கிய துருப்புக்கள் ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் இடையிலான பரந்த எல்லை பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

அபாடியையும் ஈராக்கிய இராணுவத்தைம் பொறுத்த வரையில். இது ஒரு சாதனையைச் செய்து முடித்த நிம்மதிக்குரிய தருணமாகும். ஆனால், இஸ்லாமிய அரசின் அச்சுறுத்தலை முற்றுமுழுதாக இல்லாமல் செய்து விட்டார்கள் என்ற முடிவுக்கு வருவது மிகவும் மேலோட்டமானதாகவே இருக்கும். உள்நாட்டு போரின் காயங்களைக் குணப்படுத்துவதே ஈராக்கியர்கள் இன்று எதிர் நோக்குகின்ற மிகப் பெரியதொரு சவாலாகும்.

ஈராக் இன்று பிளவு பட்டதொரு நாடாகவே இருக்கிறது. பெரும்பாலும் ஷியா முஸ்லிம்களைக் கொண்ட வளம் தொழிக்கும் எதன் பகுதி அரசாங்கத்தை ஆதரிக்கிறது. ஒப்பீட்டளவில் அமைதியாகவும் இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கிலும் தெற்கிலும் பாக்தாத்தில் உள்ள ஷியா ஆதிக்கத்திலான அரசுகளிடமிருந்து தாங்கள் அந்நியப்படுத்தப்பட்டிருப்பதாகவே மக்கள் உணருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. குர்திஷ் சுயாட்சிப் பிராந்தியம் பாக்தாதின் விருப்பத்துக்கு மாறாக சர்வசன வாக்கெடுப்பொன்றை ஏற்கனவே நடத்தியிருந்தது. அதில் பெரும்பான்மையான வாக்காளர்கள் சுதந்திரத்தை ஆதரித்திருக்கிறார்கள். இந்தப் பிளவுகளை அரசாங்கம் முறையாகக் கையாளத் தவறும் பட்சத்தில் மீண்டும் நாட்டின் பல பகுதிகள் அராஜகத்திற்குள் தள்ளப்படக் கூடிய ஆபத்து இருக்கிறது. அத்தகைய ஆபத்தான சூழ்நிலை தோன்றுமானால் அது இஸ்லாமிய அரசு போன்ற குழுக்கள் மீண்டும் சுலபமாக வளர்ந்து கால்பதிக்க வசதியாக அமைந்து விடும்.

இஸ்லாமிய அரசு நிலப்பிராந்தியத்தியங்களை இழந்திருக்கிறது, ஆனால் அந்த இயக்கம் இல்லாமல் போய்விட்டது என்று கருதுவது குருட்டுத்தனமானதாகும். உதாரணத்திற்கு கூறுவதென்றால் , தன்னைத் தானே கலிபா என்று பிரகடனம் செய்து கொண்ட அபூபக்கர் அல் - பாக்தாதிக்கு என்ன நடந்தது என்பது இது வரை தெரியவில்லை. ரஷ்ய - அமெரிக்க விமானக் குண்டு வீச்சுகளினதும் குர்தஷ் படைகளின் தாக்குதல்களினதும் விளைவான நெருக்கடிகளை எதிர் நோக்குகின்ற போதிலும் இஸ்லாமிய அரசு சிரியாவில் இன்னமும் நிலப்பிராந்தியங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது.

அல் - கயெடா இயக்கம் 2006 தொடக்கம் 2007 கால கட்டத்தில் ஈராக்கில் இதே போன்ற பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், ஈராக்கின் மதப்பிரிவுகளுக்கிடையிலான போட்டா போட்டி படுமோசமாதாகியதையடுத்தும் சிரியாவில் உள்நாட்டில் போர் மூண்டதையடுத்தும் தோன்றிய சூழ் நிலைகளில் அல் - கயெடா இயக்கம் தன்னை மீள அணி திரட்டிக் கொண்டு இஸ்லாமிய அரசாக உருமாறிக் கொண்டது. மீண்டும் அதே போன்ற நிலைமை தோன்றாதிருப்பதை பிரதமர் அபாடி உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறு உறுதி செய்து கொள்வதற்கு அவர் இராணுவத்தை கடும் உஷார் நிலையில் வைத்திருக்க வேண்டும்;. அத்துடன் அதிருப்தியுடன் வாழும் பிரிவினரான சுன்னி முஸ்லிம்களுக்கும் குர்திஷ் இனத்தவருக்கும் நேசக்கரத்தை நீட்ட வேண்டும். ஐக்கியப்பட்ட ஈராக் ஒன்றினால் மாத்திரமே தீவிரவாதிகளின் மீள் எழுச்சியை தடுக்கக் கூடியதாக இருக்கும்.

( வீரகேசரி இணையத்தள செய்தி ஆய்வு)