டயலொக் றக்பி லீக் தொடரில் முதலிடத்தில் உள்ள கண்டி எஸ்.சி. அணியும் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள ஹெவ்லொக் கழக அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கையின் எட்டு முதல்தர றக்பி கழக அணிகள் மோதும் டயலொக் றக்பி லீக் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆறாவது வார போட்டி முடிவுகளின் படி புள்ளிகள் பட்டியலில் கண்டி அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தத் தொடரில் நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் கண்டி கழக அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. அதேபோல் இரண்டாவது இடத்தில் ஹெவ்லொக் கழகம் உள்ளது.

இவ்விரு அணிகளுக்கு மிடையிலான போட்டி இன்று ஹெவ்லொக் பார்க் மைதானத்தில் மாலை 6.15 மணிக்கு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

பலம் பொருந்திய இவ்விரு அணிகளும் இன்று மோதவுள்ள போட்டியை காணவரும் ரசிகரர்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதுவரையில் தோல்வியே அடையாத கண்டியை எப்படியும் தோற்கடித்து விடவேண்டும் என்ற முனையில் ஹெவ்லொக் கழகமும், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற முனைப்பில் கண்டி கழகமும் இன்றைய போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.