தம்மை மதம் மாற்ற முயற்சிப்பதாக கிராமவாசி ஒருவர் அளித்த புகாரின் பேரில், கத்தோலிக்கப் பேராசிரியர் ஒருவர் உட்பட கிறிஸ்தவப் பாடகர்கள் ஆறு பேரை இந்தியாவின் மத்தியப் பிரதேச பொலிஸார் கைது செய்தனர்.

கிராமவாசி தாம் அளித்த புகாரில், தன்னைப் பலமுறை சந்தித்திருக்கும் இந்தக் குழுவினர் தன்னை இயேசுவை வணங்கும்படியும் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறும்படியும் அதற்காகக் காசு தருவதாகக் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மதம் மாறும்படி தாம் கூறவில்லை என்றும் கிராமங்கள் தோறும் சென்று கிறிஸ்தவப் பாடல்களைப் பாட மட்டுமே செய்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர். 

இவர்கள் பயன்படுத்திய காரை அப்பகுதியின் வலதுசாரிக் குழுவினர் சிலர் தீக்கிரையாக்கினர். இதன் பேரிலும் பொலிஸார் வழக்கொன்றைப் பதிவுசெய்துள்ளனர்.

பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மத்தியப் பிரதேசத்தில் மதமாற்றத்துக்கு எதிரான கடும் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.