பிரான்ஸில், பாடசாலைப் பேருந்து ஒன்றுடன் ரயில் மோதியதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் தெற்குப் பிராந்தியமான பெர்பிக்னன் பகுதியில், 13 ? 17 வயதுடைய 20 மாணவர்களை ஏற்றியபடி பாடசாலைப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

வழியில் குறுக்கிட்ட புகையிரதப் பாதையை பேருந்து கடக்கையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது,

குறித்த பேருந்தை ஒரு பெண் சாரதியே செலுத்திச் சென்றுள்ளார். மணிக்கு சுமார் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் வந்த ரயில் பேருந்தில் மோதியதில், அதில் பயணம் செய்த மாணவ, மாணவியரில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டதுடன் சுமார் 20 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

புகையிரதக் கடவை பாதுகாப்புத் தடுப்பு இயங்கியிருக்கவில்லை என்றும் சமிக்ஞைகள் எதுவும் இயங்கவில்லை என்றும் பேருந்தில் இருந்த ஒரு சிறுமி கூறியுள்ளார். இந்த முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் கிடைக்காத நிலையிலேயே சாரதி பேருந்தை இயக்கியதாகவும் பாதி கடந்த நிலையிலேயே ரயில் பேருந்துடன் மோதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.