(ஆர்.ராம்)

இந்தியா எப்போதும் சரியான விடயத்தின் பக்கமே நிற்கும். இந்த நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு சமூகமான சமத்துவமான நிரந்த தீர்வை ஏற்படுத்துவதற்கு தமது முயற்சிகள் தொடரும் என்ற வாக்குறுதியை வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எமக்கு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது உடன் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டுமெனக் கோரியுள்ளதாக தெரிவித்தவர் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று நண்பகல் 12மணிக்கு கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.