பீஹாரில், இறந்துபோன சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப்பட்ட பதினைந்து வயதுச் சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.

ரூபினா (25) என்பவரின் கணவர் கடையொன்றில் மின்சார வேலை செய்பவர். இவர், கடந்த 2013ஆம் ஆண்டு கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். அதற்கு நட்ட ஈடாக கடை உரிமையாளர் 80 ஆயிரம் ரூபா கொடுத்தார். இங்கேதான் பிரச்சினை ஆரம்பமானது.

நட்ட ஈட்டுப் பணத்தை இறந்தவரின் தந்தை சந்திரேஸ்வர் மொத்தமாக எடுத்துக்கொண்டார். கடந்த நான்கு வருடங்களாக, ரூபினாவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் 27 ஆயிரம் ரூபாயை ரூபினாவின் கணக்கில் வைப்புச் செய்தார் சந்திரேஸ்வர்.

எனினும் மிகுதிப் பணமும் தன் மகளுக்கே சொந்தம் என ரூபினாவின் பெற்றோர் பிரச்சினை செய்தனர். நட்ட ஈட்டுப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வழிதெரியாத சந்திரேஸ்வருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதன்படி, மிகுதிப் பணத்துக்குப் பதிலாக ரூபினாவுக்கு தனது இளைய மகனை பிரவேஷைத் திருமணம் செய்து வைக்க முயன்றார் சந்திரேஸ்வர். இதற்கு ரூபினாவின் பெற்றோரும் சம்மதித்தனர்.

கடுமையாக எதிர்த்தும் கடந்த புதனன்று ரூபினாவுக்கும் பிரவேஷுக்கும் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த இரண்டே மணித்தியாலங்களில் பிரவேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து சந்திரேஷ்வர், ரூபினாவின் பெற்றோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.