மொஹாலியில் நேற்று நடைபெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் குறிப்பிடத்தக்க இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்று இந்தியாவுக்கு சார்பான அதேவேளை, மற்றொன்று இலங்கைக்கு எதிர்மறை சாதனையாகவும் பதிவானது.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுள் நுவன் பிரதீப் நேற்று பத்து ஓவர்கள் பந்து வீசி, விக்கட் எதையும் பெறாமல் 106 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார். இதன்மூலம், தனது பந்துவீச்சில் அதிக ஓட்டங்களை வழங்கிய இலங்கை வீரர் என்ற ‘பெருமை’யை நுவன் பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன், சர்வதேச சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன் 99 ஓட்டங்களைக் கொடுத்ததே சாதனையாக இருந்தது.

மறுபுறம், இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதத்தை விளாசியது நீங்கள் அறிந்ததே! இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையை இவர் நிலைநாட்டினார்.

தனது இரண்டாவது திருமண நாளான நேற்று தான் பெற்ற அந்த இரட்டைச் சத சாதனையை தனது மனைவிக்குப் பரிசளிப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.