கரைக்கு 200 மீற்றர் தொலைவில் இருந்தபோது கடலில் சிக்கிய தந்தை பரிதாபமாக பலியானார். இதனால், அவரது ஒரே மகள் அனாதரவாகியுள்ளார்.

நாற்பத்தைந்து வயது நிரம்பிய இந்த நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள். மனைவியையும் மூத்த இரண்டு மகள்களையும் 2004 சுனாமிக்கு பலிகொடுத்த இவர், கடைசிப் பெண்பிள்ளையை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

தங்காலை, மாவெல்ல-கல்பொக்க பகுதியைச் சேர்ந்த மீனவரான இவர், நேற்று முன்தினம் (12) சக மீனவர்கள் நால்வருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.

வழியில் திசைகாட்டி சரியாக வேலை செய்யாததால் கரைக்குத் திரும்ப முடிவெடுத்த இவர்கள், கரைக்கு சுமார் 200 மீற்றரே தொலைவில் படகை நங்கூரமிட்டனர்.

பின்னர், மகளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணி, பிராணவாயுக் குழாய் சகிதம் கடலுக்குள் குதித்து கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார் இந்தத் தந்தை. இது அவரது அன்றாட நிகழ்வுதான். ஆனால், அன்று மற்றைய நாட்களைப் போல அமையவில்லை. 

கரையை நோக்கி நீந்தியபடி இருந்த இவர் திடீரெனக் கடலில் மூழ்கினார். நீச்சலில் வல்லவரான இவர் கடலில் மூழ்குவார் என்று கொஞ்சமும் எண்ணியிராத சக மீனவர்கள் அவரைக் கண்காணிக்கத் தவறினர்.

கூப்பிடு தூரத்தில் கரை இருக்க, மகளின் நினைவுடனேயே கடலில் மூழ்கி உயிரிழந்தார் இந்தத் தந்தை.

தற்போது, மொத்தக் குடும்பத்தையும் கடலுக்கே தாரை வார்த்துவிட்ட சாமிக்கா என்ற அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி, யாருமற்ற நிலையில் கரையில் அனாதரவாக விடப்பட்டிருக்கிறார்.