வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் வழிகாட்டலில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 1000 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளன.

Baticalo

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று மாலை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் அதன் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகந்நாதன் தலைமையில் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் வீடமைப்பு அமைச்சினால் இத்திட்டத்தின்கீழ் 25000 வீடுகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் 1000 வீடுகளை புனரமைப்பு செய்வதற்கென தலா ஒரு வீட்டிற்கு 10 சீமெந்து பைகள் வீதம் 10000 சீமெந்து பைகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் பிரதம அதிதியாகவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் கௌரவ அதியாகவும் பிரதேச செயலாளர்கள் சிறப்பு அதிதகளாகவும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இங்கு வழங்கப்பட்ட பற்றுச்சிட்டைக் கொண்டு குறித்த பிரதேச செயலகங்களில் சீமெந்து பைகளை பெற்றுக்கொள்ள முடியுமென மாவட்ட முகாமையாளர் தெரிவித்தார்.