கணவனைக் கொன்றுவிட்டு, காதலனையே கணவனாக ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற பெண்ணின் முயற்சி ஒரே ஒரு கோப்பை ஆட்டுக் கால் சூப்பால் தோல்வியடைந்தது.

ஸ்வாதி (27) சுதாகர் (32) தம்பதியருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள். இரண்டு பிள்ளைகள். தாதியாகப் பணியாற்றும் ஸ்வாதிக்கு, அதே மருத்துவமனையைச் சேர்ந்த இயன்முறை மருத்துவர் ராஜேஷுடன் காதல் மலர்ந்தது. கணவனைக் கொன்றுவிட்டு அந்த இடத்துக்கு ராஜேஷைக் கொண்டுவர ஸ்வாதி வித்தியாசமாக திட்டம் தீட்டினார்.

அதன்படி, இருவரும் சேர்ந்து சுதாகருக்கு மயக்க மருந்து கொடுத்து தலையில் அடித்துக் கொன்று காட்டில் எரித்தனர். பின், ஸ்வாதி தன் காதலன் ராஜேஷின் முகத்தில் அமிலத்தை ஊற்றிச் சிதைத்தார்.

பின்னர், மர்ம நபர்கள் தன் கணவர் மீது அமிலத்தை ஊற்றியதாகக் கூறி ராஜேஷை மருத்துவமனையில் சேர்த்தார். உயரம், உடற்கட்டு என்பன சுதாகருக்கும் ராஜேஷுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்ததால், யாரும் ராஜேஷை சந்தேகிக்கவில்லை. 

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஷுக்கு சுதாகரின் குடும்பத்தினர் ஆட்டுக்கால் சூப்பை அருந்தக் கொடுத்தனர். அப்போது அவர்களிடம் ராஜேஷ் பழக்க தோஷத்தில், தான் சைவம் என்றும் அசைவம் சாப்பிடுவதில்லை என்றும் உளறிக் கொட்டிவிட்டார். 

தீவிர அசைவப் பிரியரான சுதாகரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் சந்தேகத்தின் பேரில் பொலிஸுக்குத் தகவல் கொடுத்தனர். ராஜேஷின் கைவிரல் ரேகைகளை ஒப்பிட்டுப் பார்த்த பொலிஸார், அது சுதாகர் அல்ல என்பதை உறுதிப்படுத்தினர்.

விசாரணையில், ராஜேஷின் முகத்தில் ப்ளாஸ்ட்டிக் சிகிச்சை செய்துகொண்டு அவரை சுதாகராகவே காட்டிக்கொண்டு அவருடன் வாழ ஸ்வாதி திட்டம் தீட்டியது அம்பலமானது.

தான் பார்த்த தெலுங்குப் படம் ஒன்றின் அடிப்படையிலேயே தாம் இவ்வாறு திட்டமிட்டதாகவும் ஸ்வாதி பொலிஸாரிடம் தெரிவித்தார்.

ஸ்வாதியைக் கைது செய்த பொலிஸார், சிகிச்சை முடிந்ததும் ராஜேஷையும் கைது செய்யவுள்ளனர்.