காலிமுகத் திடலில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உத்தியோகபூர்வமாக இந்த மரம் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அர்ஜுன ரணதுங்க சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இந்த கிறிஸ்மஸ் மரம் திறந்துவைக்கப்பட்டது.

காலிமுகத் திடலில் நடைபெற்ற மூன்று நாள் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மரத்தின் உயரம் 72.1 மீற்றர் - அதாவது, 236 அடியும் 6.58 அங்குலம் என்று அளவிடப்பட்டிருந்தது.

அதன்படி, உலகின் உயரமான செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் என்ற சாதனையை இது படைத்துள்ளது.