கனரக வாகன உற்பத்தி நிறுவனமான ‘கொமட்ஸு’வின் தலைவர், தனது வாழ்க்கையின் பிரியாவிடை விருந்துபசாரத்தை நெகிழ்ச்சியான முறையில் கொண்டாடினார்.

கொமட்ஸு கனரக நிறுவனத் தலைவர் சட்டோரு அன்ஸாக்கி. எண்பது வயதான இவர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. சிகிச்சை எடுத்துக்கொண்ட போதும் அது தந்த பக்கவிளைவுகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, சிகிச்சைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, எஞ்சியுள்ள சில நாட்களை எளிமையாகவும் இயல்பாகவும் கழிக்க விரும்பினார். அதற்கு முன், தனது எண்பது ஆண்டு கால வாழ்க்கையில் தான் சந்தித்த முக்கியமான நபர்களைச் சந்தித்து அவர்களுடன் நன்றி பாராட்ட விரும்பினார்.

இதற்காக, கடந்த மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருந்தார். அதன்படி, நேற்று (11) திங்களன்று டோக்கியோவில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் இந்த நன்றி நவிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவரது வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் உள் அலங்கார வேலைப்பாடுகள் அமைந்திருந்தன. அவரது நண்பர்கள், ஆசிரியர்கள், தொழில் துறை நண்பர்கள் என சுமார் ஆயிரம் விருந்தினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பெரும்பாலானவர்களுடன் கைகுலுக்கி தனது நன்றியைத் தெரிவித்தார் சட்டோரு.

இதையடுத்து, வயதான வசதியுடையவர்கள் பலரும் இதேபோன்ற நிகழ்வை நடத்த விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.