என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் என்னுடைய இறுதிப் போட்டிகள் சிலவற்றை அனுபவித்து விளையாடுவேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீற்றர்சன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ‘பிக் பாஷ்’ இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த 37 வயதான கெவின் பீற்றர்சன், அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. 

எனினும், இருபதுக்கு - 20 லீக் தொடர்களில் விளையாடி வந்தார். ஐ.பி.எல். தொடரில் விளையாடி வந்த பீற்றர்சன் காயம் காரணமாக இம்முறை நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் வர்ணனையாளராக செயற்பட்டார்.

இம்மாதம் நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் இருபதுக்கு - 20 கிரிக்கெட் லீக் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் விடைகொடுக்கப்போவதாக பீற்றர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பீட்டர்சன் தெரிவிக்கையில்,

‘‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் என்னுடைய கடைசி சில போட்டிகளை அனுபவித்து விளையாடுவேன். ஓய்வு மிகவும் நெருங்கியுள்ளது’’ என்றார்.

தென் ஆபிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட கெவின் பீற்றர்சன் இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8181  ஓட்டங்களை குவித்து, 47.12 என்ற துடுப்பாட்ட சராசரியைக்  கொண்டுள்ளார். 

மேலும், 136 சர்வதேச  ஒருநாள் போட்டிகளில் 4440 ஓட்டங்களையும் , 37  இருபதுக்கு - 20 போட்டிகளில் 1176 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.