இந்திய அணியின் தலைவர் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இத்தாலியில் உள்ள டஸ்கனி  நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகின.

இது தொடர்பில் விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் மற்றும் இன்ஸ்டர்கிராம் பக்கங்களில் திருமணம் தொடர்பில் பதிவிட்டிருந்தனர்.

கடந்த வாரமே இருவரும் இத்தாலியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில் நேற்று திருமணம்  முடிந்ததாக தெரிகிறது. 

இந்த திருமணத்தில் பொலிவுட் நடிகர் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ‛ஷம்பு விளம்பரம் ஒன்றில் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. 

விராட் கோலி பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை காண அனுஷ்கா ஷர்மா விளையாட்டு மைதானங்களுக்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் சில காலம் இருவரும் பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் இருவரும் பிரியவில்லை என்றும் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இத்தாலியில் உள்ள டஸ்கனி  நகர விடுதியில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி டில்லியிலுள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.