இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாட உள்ளது. 

இன்று இலங்கையில் நடைபெற்று வரும் புதிய அரசியலமைப்பு தொடர்பான செயன்முறைகள் பற்றி நாம் அவருக்கு விரிவாக விளக்கி கூறவுள்ளோம். 

இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதானப்படுத்தி, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக நாம் நியமித்துள்ள அரசியலமைப்பு யோசனை வரைபு நிபுணர் குழுபற்றியும் நமது யோசனை திட்டங்களை நாம் அரசியலமைப்பு பேரவைக்கு விரைவில் முன்வைக்க உள்ளதையும் வெளிவிவகார அமைச்சருக்கு முறைப்படி அறிவிக்க உள்ளோம். 

கடந்த காலங்களை போலல்லாமல் இன்று இந்த நாட்டின் ஒவ்வொரு தேசிய நீரோட்ட திருப்பத்திலும் நமது மக்களின் அபிலாஷகளும் உள்வாங்கப்படும் திடமான சூழலை தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கியுள்ளது. 

நமது கூட்டணியின் யோசனைகள், அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை மற்றும் முஸ்லிம் கட்சிகள், தென்னிலங்கை முற்போக்கு சிங்கள அமைப்புகள் ஆகியவற்றுக்கும் வழங்கப்பட்டு அவர்களின் ஆதரவுகளும், கருத்துகளும் உள்வாங்கப்படும் நடைமுறையையும் நாம் முன்னெடுக்க உள்ளோம். 

அதன்பின்னர் எமது யோசனைகள் வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களினது யோசனை திட்டங்களுக்கு சமாந்திரமாக  தேசிய அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கப்படும்.  இதற்கான முயற்சிகளை நிதானமாகவும் காத்திரமாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்து வருகின்றது. 

இந்த முயற்சிகளுக்கு இந்திய அரசின் தார்மீக ஆதரவை மேன்மேலும் அதிகரிக்கும்படி நாம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை கோருவோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.