( ஆ.பிரபுராவ் )

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கை மற்றும் ஓகி புயல் எச்சரிக்கையால்  11  நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் இன்று மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.   

இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில்  அவதியுறும்  மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும், மீனவர்கள் சேமிப்பு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல்  இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற  போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஓகி புயலால் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீன்துறை அதிகாரிகள் மீன்பிடி அனுமதி டோக்கனை இரத்து செய்திருந்தனர். 

11 நாட்களாக மீன்பிடிக்க செல்லததால்   இதனால் பத்து  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் ஒரு இலட்சத்திற்கும்  மேற்ப்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளார்களும் வேலையிழந்தனர் .

இந் நிலையில் 11 நாட்களுக்குப்பின இன்று இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தில்  உள்ள மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.

இதனையடுத்து  சுமார் ஆயிரத்து  500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்  மீனவர்கள் ஒருவித அச்சத்தோடு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு கேரளா மாநிலம் வழங்கியதைப்போன்று ரூபா 20 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஓகி புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் பாரம்பரிய கடல்பகுதியில் பிரச்சினை இன்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறைகளில் வாடிவரும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர் .