இந்திய-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தெரிவுசெய்துள்ளது.

திசர பெரேரா தலைமையிலான இலங்கை அணி, டெஸ்ட் தொடரில் வெற்றியைத் தொலைத்திருப்பதால் ஒருநாள் தொடரைத் தம் வசப்படுத்தும் முயற்சியில் கடுமையாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தாலும் துடுப்பாட்டத்தையே தாம் தெரிவுசெய்ய இருந்ததாகக் கூறிய ரோஹித் ஷர்மா, “நாணயச் சுழற்சியில் தோற்றதும் நல்லதற்கே” என்று கூறியுள்ளார்.

திருமண சர்ச்சைகளுக்கு மத்தியில் விராட் கோலி ஓய்வு பெற்றிருப்பதால், தலைமைப் பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோலியின் இடம் வெற்றிடமாக இருக்கின்றபோதும், தோனி, தவான், தினேஷ் கார்த்திக், ரோஹித் ஷர்மா, ரஹானே என துடுப்பாட்ட வீரர்களுக்குப் பஞ்சமில்லை.

வலைப் பயிற்சியில் தோனி அபாரமாகப் பந்துவீசும் காட்சிகள் ட்விட்டரில் வெளியானதையடுத்து, இப்போட்டியில் தோனி பந்து வீசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.