ஹிக்கடுவ கடலில் குளித்துக்கொண்டிருந்த ரஷ்ய உல்லாசப் பிரயாணி (52) ஒருவர் திடீரென எழுந்த அலையில் சிக்கி உயிரிழந்தார். ஹிக்கடுவ - திரணகமவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலேயே நேற்று (9) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன் உல்லாசப் பயண நிமித்தமாக இலங்கை வந்த அவர், சம்பவத்தின்போது உக்ரேன் நாட்டைச் சேர்ந்த தனது மனைவியுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்ததாகவும் திடீர் அலையில் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டபோதும் மனைவி மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகவும் விடுதிப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட அவரது உடல் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் உடற்கூற்றியல் பரிசோதனை இன்று நடைபெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.