உறுதியானதும் நிலையானதுமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தேசிய விமான சேவையான ‘ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார். 

நிறுவனத்தின் பிரதான கடன் வழங்குனர்களான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன நெருக்கடியான சூழலில் இருப்பதாகவும் இந்த ஆபத்தில் இருந்து நிறுவனம் தப்புவதற்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஒன்று, நிறுவனத்திற்கு புதிதாக ஒரு சம பங்குதாரரை இணைத்துக்கொள்ளவேண்டும். அப்படியொரு பங்குதாரர் கிடைக்காதவிடத்து, அரசின் நிதியைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து சுயமாகவே மறுசீரமைத்துக்கொள்வது. இவ்விரண்டு வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமே நிறுவனத்தைக் காப்பாற்ற முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் நிதி நிலைமையை ஆராய்ந்த சில நிறுவனங்கள், அதில் முதலிடும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளன. 

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன மென்மேலும் நிதியைத் திரட்டித் தருவதாகக் கூறியுள்ளன. என்றபோதும், ஏலவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள கடன்கள் இன்னும் திருப்பிச் செலுத்தப்படாதுள்ளது. இந்த நிலையில் மேலும் கடன்களை வாங்குவது நிறுவனத்தின் நிலைமையை மட்டுமன்றி இரண்டு வங்கிகளின் நிலையையும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும் என்றும் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார்.