இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியும் அவரது காதலியும் பொலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் அடுத்த ஓரிரு வாரங்களில் இத்தாலியில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக செய்தி எழுந்தது. அதை அனுஷ்கா தரப்பு மறுத்தபோதும் திருமணம் நடைபெறவிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சில செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து அனுஷ்கா ஷர்மா இத்தாலிக்குப் பயணமானார். அவருடன், அவரது குடும்பத்தினரும் சென்றிருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதுபோலவே, கோலியின் குடும்பத்தினரும் நண்பர்கள் சிலரும் இத்தாலிக்குப் பயணம் செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிக் கிடைத்திருக்கும் சுருக்கமான விபரம் இதுதான்:

மூன்று மாதங்களுக்கு முன்னரே இரு தரப்பினரும் கலந்து பேசி திருமணத்துக்கு நாள், இடம், நேரம் அனைத்தையும் குறித்திருக்கிறார்கள். அதன்படி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி குடும்பத்தினருடனும் நெருங்கிய நண்பர்கள் சிலருடனும் இத்தாலி சென்றிருக்கிறார் கோலி. 

இதுமட்டுமன்றி, கோலியின் ஆரம்ப காலப் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது.

கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அனுஷ்கா தரப்பில், நடிகர் ஷாருக் கான், அமீர் கான் மற்றும் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா உட்பட ஒரு சிலர் மட்டும் அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இம்மாதம் 12 அல்லது 18ஆம் திகதி திருமணம் நடைபெறலாம் என்றும் தென்னாபிரிக்க சுற்றுத் தொடர் ஆரம்பமாவதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக நாடு திரும்பவுள்ள கோலி-அனுஷ்கா தம்பதியர்(!) மும்பையின் ‘சோபோ’ எனும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு உபசாரத்தை நடத்தவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தென்னாபிரிக்க சுற்றுலாவின்போது தானும் போவதற்கு வசதியாக அனுஷ்கா விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.