அகதியாக கரூரில் தங்கியிருக்கும் இலங்கைச் சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள்.

வசதியில்லாததால் பாடசாலையைக் கைவிட்டவர் இச்சிறுமி. இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக கரூரில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறது.

சிறுமியின் தாய்க்கு ஏற்கனவே அறிமுகமான சரண்யா (27) என்பவர், வீட்டில் இருந்த அச்சிறுமிக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார்.

ஒருநாள் திடீரென்று சிறுமியுடன் சரண்யா மாயமானார். சிறுமியை திருப்பூருக்கு அழைத்துச் சென்ற சரண்யா, அங்கு மேலும் சிலருடன் சேர்ந்து அச்சிறுமியை பலவந்தமாக ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றிருக்கிறார்.

எப்படியோ அங்கிருந்து தப்பி வந்த சிறுமியின் போக்கில் மாற்றத்தை அவதானித்த அவரது தாய், பொலிஸில் புகார் கொடுத்தார். விசாரணையில், நடந்தவை அனைத்தும் அம்பலமாகின.

இதையடுத்து ஆட்கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோதமாகத் தடுத்துவைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், சந்தேக நபர்கள் ஏழு பேரையும் கைது செய்தனர்.