வத்தளை புனித ஆனாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் இயேசுவின் படம் ஒன்றில், இயேசுவின் நெற்றிப் பகுதியில் இருந்து வியர்வை தோன்றுவதாகக் கூறப்படுவதையடுத்து, பெருவாரியான கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட மக்கள் தேவாலயம் நோக்கிப் படையெடுத்த வண்ணமிருக்கின்றனர்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இந்தியாவின் சாலக்குடியில் இருந்து வந்த பாதிரிமார் குழுவொன்று தேவாலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலருக்கு சில படங்களை வழங்கியிருந்தது.

அந்தப் படங்களுள் ஒன்று அப்பகுதிவாசியான நிரோமி அமரசிங்க என்ற பெண்ணுக்கும் வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் அந்தப் படத்தில் இருந்து வியர்வை வழிய ஆரம்பித்தது.

இதையடுத்து நிரோமி இது பற்றி வண.பிதா சஞ்சீவ் மெண்டிஸிடம் கூறியுள்ளார். அவரது அறிவுரைப்படி அந்தப் படம் புனித ஆனாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

“படத்தில் இருந்து அடிக்கடி வியர்வை போன்றதொரு திரவம் வழிவது உண்மைதான். ஆனால், அதற்கு ஏதேனும் விஞ்ஞானபூர்வ விளக்கம் இருக்கலாம். எவ்வாறெனினும் இதுவரை அதை யாரும் விளக்க முன்வரவில்லை” என்று வண.பிதா தெரிவித்தார்.