(எம்.சி.நஜிமுதீன்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்தின் மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. தெஹிவளை - கல்கிஸை, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

நிதித்துறை இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண தலைமையிலான குழுவினர் இன்று காலை கொழும்பு மாவட்ட செயலகத்தில் குறித்த மூன்று சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். 

இதேவேளை ஹிங்குரான்கொட பிரதேச சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கட்டுப்பபணம் செலுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர் நாளக கொலன்னேவினால் பொலநறுவை மாவட்ட செயலகத்தில் அக்கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. 

மேலும் நாவலப்பிட்டி உள்ளூராட்சி மன்றத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகேவினால் நேற்று கண்டி மாவட்ட செயலகத்தில் கட்டுபணம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறுவற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் கட்சிகள் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதேவேளை கூட்டிணைந்து போட்டியிடவுள்ள கட்சிகள் ஆசன ஒதுக்கீட்டில் மும்முரம் காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.