ரயில்வே சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளன.

குறித்த காலப் பகுதியில், பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார்.

எனினும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஊழியர்கள் தமக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்படவில்லை என பயணிகளிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ரயில் சாரதிகளுக்கான உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடைமுறை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் வேலை நிறுத்தம் தொடரும் என ரயில்வே ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

குறித்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், மக்களின் வசதியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அனைவரினது விடுமுறைகளும் இரத்துச் செய்யப்படவுள்ளன.

இதனால், பயணிகளின் நலன் கருதி மேலதிகமாக 400 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார்.

இதனடிப்படையில் 5600 பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.