"நாட்டுப்பற்றிருந்தால்  எங்களுடைய புதிய கூட்டணியில் வந்து  இணையுங்கள் கடந்தகால கூட்டமைப்பு போல் தனிக்கட்சி அதிகாரம் இங்கில்லை எனவே பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதை விடுத்து ஒன்றிணையுங்கள்" என வீ.  ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

இன்று கிளிநொச்சியில் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்,

"கஜேந்திரகுமார் அரசியலில் பால்குடி நான் பாராளுமன்ற போகும் போது அவா் பிறக்கவில்லை ஆகவே அவா் வாய் திறக்கும் போது யோசித்துவிட்டு திறக்க வேண்டும். நான் கஜேந்திரகுமாரின் தந்தை பேரன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுடன்  சேர்ந்து அரசியல் செய்தவன். ஆகவே வரலாறு தெரியாது பேசுவது சிறுபிள்ளைதனமானது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி தீர்வை முன்வைத்தே போட்டியிட்டார். அவருக்கு எதிராக மஹிந்த போட்டியிட்டார் ஆனால் கஜேந்திரகுமார் தரப்பினர் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று  மக்களை வலியுத்தினாா்ர்கள். இது சமஷ்டிக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதே. இதனை அவா் மறந்திருக்க முடியாது.

வரலாறு இப்படியிருக்க நாங்கள்  வடக்கு - கிழக்கு இணைப்பை பேசவில்லை என்று கூறுவது சுத்தப் பொய். நாங்கள் இன்றும் சமஷ்டியை வலியுறுத்தி வருகின்றோம்.  அல்லது  சமஷ்டியை எட்டும் வரைக்கும் இந்திய முறையிலான தீர்வை  வலியுறுத்தியிருகின்றோம். 

கஜேந்திரகுமாரின் தந்தை மற்றும் அவரின் பேரன் ஆகியோர் உன்னதமான தலைவா்கள் எனவே கஜேந்திரகுமார் இவா்களின் வரலாறுகளை அறிந்து பேசவேண்டும்." என்றும் கேட்டுக்கொண்டார்