நல்லாட்சி அரசாங்கத் துக்கு எதிர்க்கட்சியாகவும்  மக்களின் மாற்றுக்கருத்துக் களுக்கான குரலாகவும் இருக்கின்ற ஒரே கட்சி  கூட்டு எதிரணியாகும்.    எனவே எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் குரலாக  கூட்டு எதிரணி போட்டியிடும் என்று  அதன் முக்கியஸ்தரும்  முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். 

சிறிலங்கா சுதந்திரக் கட்சி   நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கும்வரை கூட்டு எதிரணி   அதனுடன் இணையப்போவதில்லை. மேலும் கூட்டு எதிரணிக்குள் எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை.  எமது பங்காளிக் கட்சிகள் சிறந்த புரிந்துணர்வுடன்  செயற்பட்டுவருகின்றன. எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நாட்டு மக்கள் சர்வஜன வாக்கெடுப்பாகவே பார்க்கின்றனர்  என்றும் அவர் குறிப்பிட்டார். 

கூட்டு எதிரணி  சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான சாத்தியம்  இதற்கு பின்னரும் உள்ளதா என்று வினவியபோதே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் இது  தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்கள் அரசாங்கம்  தொடர்பில்  அதிருப்தியுடன் இருக்கின்றனர்.    எதிர்வரும்  உள்ளூராட்சிமன்ற தேர்தலை மக்கள்  சர்வஜன வாக்கெடுப்பாகவே கருதுகின்றனர். அவ்வாறு  கருதியே   மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இவ்வாறு மக்கள் அரசாங்கம் தொடர்பாக  அதிருப்தியுடன் இருக்கும்போது நாம் எப்படி   அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்   கட்சி ஒன்றுடன்  இணைய முடியும்? 

அரசாங்கத்துடன்  இன்று பல கட்சிகள் உள்ளன.   எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்கின்ற   தமிழ்க் கூட்டமைப்பும்  அரசாங்கத்துடன் தான் உள்ளது. ஆனால்  எதிர்க்கட்சி சார்பில் நாங்கள் மட்டுமே இருக்கின்றோம்.  அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் குரலாக நாங்கள் மட்டுமே இருக்கின்றோம்.  

எனவே  மக்களுக்காக  நாங்கள்  முன்னிற்கின்றோம்.    அந்தவகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி  அரசாங்கத்தைவிட்டு விலகினால் அக்கட்சியுடன் இணைந்து    தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால்  சுதந்திரக் கட்சி  ஐக்கிய தேசிய கட்சி  தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலக  தயங்குகின்றது. 

அவ்வாறு நல்லாட்சியிலிருந்து  விலக தயங்கும்   சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன்   அரசாங்கத்தின் மீது அதிருப்தியுடன் இருக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும் நாங்கள் எவ்வாறு இணைய முடியும்? அதனால்தான் அரசாங்கத்திலி்ருந்து  சுதந்திரக் கட்சி விலகினால்   நாங்கள் இணைந்துகொள்வதாக கூறிவருகின்றோம்.    எனினும் சுதந்திரக் கட்சி விலக தயாராக இல்லாமையினால்  கூட்டிணைவு என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.   நாட்டு மக்கள்  இந்தத் தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பாகவே  பார்ப்பதால் நாங்கள்  அதனை  பயன்படுத்திக்கொள்வோம். 

எது எப்படியிருப்பினும் நாங்கள்    சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில்  தேர்தலுக்கு    முகம்கொடுக்கின்றோம்.     நாங்கள்  தற்போது  25 மாவட்டங்களிலும்  கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றோம்.      வேட்பு மனுக்களை தயாரித்துவருகின்றோம்.     எமது அணியில் போட்டியிட   வேட்பாளர்கள்  அதிகமாகவே முன்வருகின்றனர்.  மிகவும் பலமான அணியாக  எமது  சிறிலங்கா பொதுஜன பெரமுன    எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுகின்றது.  

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நாங்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளோம்.   நாடு முழுவதும்  முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியதும் எமது கட்சியே என்பது  விசேட அம்சமாகும்.  

கேள்வி கூட்டு எதிரணிக்குள் கடும் பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகின்றதே? 

பதில் அவ்வாறு ஒன்றும் இல்லை.    கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும்போது இவ்வாறான வதந்திகள் பரப்பப்படும்.  அதுமட்டுமன்றி  ஆசனப்பங்கீட்டின்போது சில சிக்கல்கள் ஏற்படுவதுண்டு.  அவற்றை  நாங்கள்  சரி செய்து பயணிப்போம்.     எமது கூட்டணி  வெற்றிகரமாக பயணிக்கின்றது. 

கேள்வி  உங்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்புகொண்டு பேசினாரா? 

பதில்  அது தொடர்பில்  கருத்துக்கூற விரும்பவில்லை என்றார். 

எவ்வாறு  இருப்பினும்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன்  கூட்டு எதிரணி இணைந்து செயற்படுவது   தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்  பஷில் ராஜபக்ஷவுடன்  தொடர்புகொண்டு பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது.