பொதுச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்  கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என அறிவித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு நீதிமன்றில் கடும் ஆட்சேபம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பிலான ரிட் மனு இன்று (6) விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, இந்தத் தடை உத்தரவு ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்டது எனவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் கடும் தொனியில் வாதிட்டார். 

மனுதாரரான கோத்தபாய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், மேற்படி இடைக்கால தடை  உத்தரவை மேலும் 10 நாட்களுக்கு நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் எதிர்வரும் 15ஆம் திகதி இம்மனு மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதாகவும் அன்றைய தினம் இடைக்கால தடையை நீக்குவதா, இல்லையா என்பது குறித்து அரச  பிரதி சொலிசிற்றர் ஜெனரலின் வாதத்தை ஆராய்ந்து உத்தரவு வழங்குவதாகவும்  நீதிமன்றம் அறிவித்தது.

டீ.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணிப்பின்போது அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்தேக நபராகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.