இன்றைய திகதியில் கணினி சார்ந்த பணிகளை பெரும்பான்மையானவர்கள் செய்து வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு மணிக்கட்டுப்பகுதியில் சிறிய வீக்கம் போன்ற கட்டி தோன்றும். இது தொடக்கத்தில் வலியை ஏற்படுத்தாது இருந்தாலும், இதனை உரிய காலத்தில் மருத்துவரிடம் காட்சி சிகிச்சைப் பெறவில்லை என்றால், கட்டைவிரலில் ஒரு பகுதியிலோ அல்லது விரல் முழுவதிலோ வலி உண்டாகும். இதன் காரணம் தெரியாததால் மனம் குழப்பமடையும். பணித்திறன் பாதிக்கும்.

இதற்கு மருத்துவத்துறையில் மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம் (Ganglion) என்று குறிப்பிடுகிறார்கள். இது ஒரு சிலருக்கு இடது கை அல்லது வலது கையிலும், ஒரு சிலருக்கு காலின் மேல்பகுதி, கணுக்கால் பகுதி இடது மற்றும் வலது என எந்த கால்களிலும் வேண்டுமானாலும் வரக்கூடும். இந்த பாதிப்பின் காரணமாக உருவாகியிருக்கும் சிறிய கட்டியில் மெல்லிய திசுப்பை (Cyst) இருக்கும். இதனுள்ள திரவச்சுரப்பு இருக்கும். இது சிறியதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் பெரிதாக இருந்தால் மற்றவர்கள் இதைப் பற்றி கேட்பதுடன் மட்டுமல்லாமல் பயமுறுத்திவிடுவார்கள். ஒரு சிலருக்கு இதன் காரணமாக விரல், விரல்கள், விரல்கள் இருக்கும் பகுதி, மணிக்கட்டு, எந்த கையில் வீக்கம் இருக்கிறதோ அந்த கையின் ஒரு பகுதி என இதன் வலி பரவும். இரவில் இது பெரிய மன உளைச்சலையும் தூக்கமின்மையும் ஏற்படுத்தும். இதனை மருத்துவர்கள் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருந்துகள் மூலம் குணப்படுத்த முயல்வர். அதன் பிறகும் வலி தொடர்ந்தால், Ganglionectomy என்ற சத்திர சிகிச்சையை மேற்கொண்டு அந்த திசுப்பையிலுள்ள திரவ சுரப்பை அகற்றி குணப்படுத்துவர். ஒரு சிலருக்கு இந்த வீக்கம் மீண்டும் வரக்கூடும். அதன் போது மருந்துகள் மூலம் அதனை கட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களின் கை மற்றும் விரல்களின் பயன்பாட்டை வரையறுப்பர். அதன் பின் இதன் பாதிப்பு முழுமையாக நீங்கும்.

டொக்டர் எம் கோட்டீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்