நாட்டில் சுனாமி எச்சரிக்கை என்ற வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை உண்மையாவென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வீரகேசரி இணையத்தளம் வினவியபோதே, இது தொடர்பில் அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுனாமி தொடர்பான வதந்தியொன்று இன்று மொரட்டுவை பகுதியில் ஆரம்பத்தில் பரவியது. அது தற்போது நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை.

இவ்வாறான தவறான செய்திகள் வட்ஸ்அப் மூலம் மக்கள் மத்தியில் பரப்பப்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தற்போது கடல் பகுதியில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றே வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது எனத் தெரிவித்தார்.